
இலங்கை விமான நிலையங்களுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு
இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் வரும் பயணிகளின் பொருட்களுக்கான கிருமி தொற்று நீக்கும் செயற்பாட்டை நிறுத்த சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
குறித்த தொற்று நீக்கல் செயற்பாடு காரணமாக உடல் நல பாதிப்புக்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கவலைகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த செயல்முறை குறித்த அச்சம் பயணிகளின் சுமுகமான இயக்கத்தை தாமதப்படுத்துவதுடன் ஊழியர்களிடையேயும் பயத்தை ஏற்படுத்துகிறது.இலங்கை வரும் பயணிகளுக்கு அதிகளவு தொந்தரவை கொடுப்பதாக தெரிவிக்கப்படுவதை அடுத்து இந்த செயல்முறையை நிறுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பான நடைமுறை சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, பயணிகள் கொண்டுவரும் பொதிகளுக்கான கிருமிநாசினி தொற்று செயல்முறையால் குறிப்பிடத்தக்க நன்மை எதுவும் இல்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன் விளைவாக, கிருமித் தொற்று நீக்கும் செயல்முறையை பரிந்துரைக்கவில்லை என்றும் அதை அனைத்து விமான நிலையங்களிலும் நிறுத்த வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் விமான நிலையங்களுக்கு அறிவித்துள்ளது.
எனினும் கொரோனா வைரஸைக் கருத்தில் கொண்டு அனைத்து பயணிகளும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சிறப்பு வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.