
புதுக்குடியிருப்பில் கரடி தாக்கி விவசாயி படுகாயம்!
புதுக்குடியிருப்பு - மன்னாகண்டல் பகுதியில் வயல் வேலைக்குச் சென்ற விவசாயி, கரடி கடித்து காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோம்பாவில் புதுக்குடியிருப்பினைச் சேர்ந்த 39 அகவையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கரடியின் கடிகாயங்களுக்கு உள்ளான நிலையிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னாகண்டல் பகுதியில் வயல் விதைத்துள்ள இவர், அதனை பார்வையிட நண்பருடன் சென்றுவிட்டு திரும்பிய போதே அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து கரடி தாக்கியுள்ளது.
நண்பரின் உதவியுடன் வயல்பகுதியில் இருந்து வெளியேறி புதுக்குடியிருப்பு மருத்துவமனை சென்று அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.