
பாறைதட்டிய எம்.வி.யுரொசன் கப்பலின் தலைவர் பாதையை மாற்றி பயணித்துள்ளார்...!
ஹம்பாந்தோட்டை கடற்பகுதியில் சின்ன இராவணன் கோட்டை பகுதியில் பாறைதட்டிய எம்.வி.யுரொசன் கப்பலின் தலைவர் தீர்மானிக்கப்பட்ட பாதையை மாற்றி பயணித்துள்ளமை தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹதபுர இதனை எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.
இதன் காரணமாகவே கப்பல் பாறை தட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கப்பல் மோதியமையினால் கடல்படுகைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கணக்கிடுவதற்கு கடற்படுகை ஆய்வாளர்களின் விஞ்ஞானபூர்வ அறிக்கையை பெற்றுக் கொள்வதற்கு கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
இதற்கிணங்க இன்று பிற்பகல் 2 மணியளவில் தொலை காணொளி ஊடாக கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் முகாமையாளர் பேராசிரியர் டர்னி பிரதீப் குமார தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் நாரா நிறுவனம் மற்றும் துறைசார் நிபுணர்கள் சிலரையும் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
லைபீரிய கொடியுடன் அபுதாபி துறைமுகத்தில் இருந்து இலங்கையின் திருகோணமலைக்கு சீமெந்து உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களை கொண்டு சென்ற எம்.வி யுரோசன் கப்பல், சின்ன இராவணன் கோட்டை கடலில் நேற்று முன்தினம் பிற்பகல் பாறை தட்டியது.
பாறை தட்டிய குறித்த கப்பல் நேற்று பிற்பகல் அங்கிருந்து அகற்றப்பட்டது.
எவ்வாறாயினும் கப்பலில் இருந்து சீமெந்து உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்கள், எரிபொருள் உள்ளிட்டவை எவையும் கசியவில்லை என கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
கடற்படையின் சுழியோடிகளால் இன்று முற்பகல் கடலுக்கடியில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் வழங்கும் தரவுகளுக்கு அமைய குறித்த கப்பலை துறைமுகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.