இனி விசேட பாதுகாப்பு வலயத்துக்குள் மேல் மாகாணம்! விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்

இனி விசேட பாதுகாப்பு வலயத்துக்குள் மேல் மாகாணம்! விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்

மேல்மாகாணத்தில் எதிர்வரும் தினங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பது தொடர்பில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதுடன் உடனடி அன்டிஜன் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் தொடர்பிலும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதுடன் , பாடசாலை வாகன சாரதிகளுக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

மேல்மாகாணத்தின் பல பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்போது தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மேல்மாகாணத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளில் உடனடி அன்டிஜன் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று (25) திங்கட்கிழமை தொடக்கம் மேல்மாகாணத்தில் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

அதற்கமைய மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றவா என்பது தொடர்பில் அவதானிக்கப்படவுள்ளது.

பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகன சாரதிகள் மற்றும் சாரதி உதவியாளர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றார்.