
10 இலட்சம் மக்கள் தொகைக்கு 2465 தொற்றாளர்கள் 12 மரணங்கள்..!
இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் பதிவாகியுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கை தொடர்பான புதிய தரவுகளை தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வெளியிட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் 10 இலட்சம் பேரில் 2465 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதுடன், 12 பேர் மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியிட்டிருந்த தரவுகளில் நாட்டில் 10 இலட்சம் பேரில் 2 366 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாகவும் 11 பேர் மரணித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் அந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
அத்துடன் இந்தியாவில், 10 இலட்சம் பேரில் 7573 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதுடன், மரணித்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் 10 இலட்சம் பேரில் 10062 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதுடன், மரணித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் 10 இலட்சம் பேரில் 1121 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 36 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் நாளாந்தம் சுமார் 600 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்படுகின்றமை அவதானமான நிலையாகும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹண எச்சரித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை உரிய முறையில் செயற்படுத்தாமையே இந்த நிலைமைக்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இராங்க அமைச்சர் டி.வி.சானக தம்மை சுயதனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
கொவிட் 19 தொற்றுறுதியான இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுடன் தொடர்பை பேணியமை காரணமாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் வரையில் வீட்டிலேயே சுயதனிமைப்படுத்தி கொள்ள தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவின் சாரதிக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இந்தநிலையில் இராஜாங்க அமைச்சருக்கும் நாளைய தினம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது