மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை இன்றைய தினமும் தொடருமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவயில் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீற்றர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.

மேலும், தெற்கு கடல் பிராந்தியங்களிலும் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான்கதவுகள் அனைத்தும் தொடர்ந்தும் திறந்துள்ளதுடன், மாவட்டத்தின் பல குளங்களில் நீர்மட்டம் தொடர்ந்தும் வான்பாய்ந்து வருவதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக கனகராயன் ஆற்றைய அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, கனகாம்பிகைகுளம், இரத்தினபுரம், ஆனந்தபுரம் கிழக்கு, புளியம்பொக்கனை, பெரியகுளம், உழவனுர், பிரமந்தனாறு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் அவதானமாக செயற்படுமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தி உள்ளது.

தொடர்ச்சியாக மழைவீழ்ச்சி பதிவாகும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும், குளங்கள் மற்றம் நீர் தேங்கியுள்ள ஆழமான பகுதிகளை பார்வையிட செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.