வவுனியாவில் மேலும் அதிகரித்தது கொரோனா தொற்று

வவுனியாவில் மேலும் அதிகரித்தது கொரோனா தொற்று

வவுனியா பட்டாணிச்சூரை சேர்ந்த 6பேர் உட்பட எட்டு பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிசூர் பகுதியில் 7 பேருக்கு கொரோனா தொற்று பீடித்திருந்தமை கடந்த வாரம் உறுதிசெய்யப்பட்டது.

இந் நிலையில் பட்டாணிச்சூர் கிராமம் கடந்த ஒருவாரமாக முடக்கப்பட்டிருந்ததுடன் குறித்த நபர்களுடன் தொடர்புகளை பேணிய பலருக்கு பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை வவுனியா பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 146 பேரில் நேற்றுமுன்தினம் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 100 பேருக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அவர்களில்40 பேரின் முடிவுகள் மீளவும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது அவர்களில் பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 6 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் ஒருவரது மாதிரிகள் மீளவும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியாநகர வியாபார நிலையங்களில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 106 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில் 36 பேரது மாதிரிகள் மீளவும் பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளது.

இதேவேளை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மொத்தமாக 8பேருக்கு நேற்றையதினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் வவுனியாவின் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.