மீண்டும் கொழும்பில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் -இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்

மீண்டும் கொழும்பில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் -இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்

இலங்கையில் நேற்றைய தினம் பதிவான கொரோனா தொற்றாளர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

“நேற்றைய தினம் இலங்கையில் வெளிநாட்டிலிருந்து வருகைதந்த 7 பேர் உள்ளிட்ட 460 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் 249 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 52 பேர் கம்பஹா மாவட்டத்திலும் கண்டியில் 38 பேரும் காலியில் 29 பேரும் உள்ளடங்குகின்றனர்.

அதேபோல் கொழும்பு, வெலிக்கடை, மஹர, நீர்கொழும்பு ஆகிய சிறைச்சாலை தொற்றாளர்கள் 35 பேரும் இதில் உள்ளடங்குகின்றனர்.

இலங்கையில் இதுவரை 42 ஆயிரத்து 62 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 33 ஆயிரத்து 924 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

நேற்றைய தினமும் இலங்கையர்கள் 400 பேர் வரை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். இன்றைய தினமும் 600 க்கும் அதிகமானோர் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர். எமிரேட்ஸ் விமானத்தின் ஊடாக 300 க்கும் அதிகமானோர் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர். இதற்கு மேலதிகமாக இந்தியா, மாலைதீவு மற்றும் பங்களதேஷ் , சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து சிறியளவிலானோர் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளனர்.”என அவர் மேலும் தெரிவித்தார்