நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 616 கொவிட்-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 737 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில், 560 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர்.

ஏனைய 51 பேர் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 5 பேருக்கும் நேற்றைய தினம் கொவிட்19 தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் இந்தியா , யுக்ரேன் ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா இரண்டு பேருக்கும் மற்றும் குவைட்டில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கும் இவ்வாறு நேற்று கொவிட்19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை, பேலியகொடை மீன் சந்தை மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடைய கொவிட் 19 தொற்றுறுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 31 ஆயிரத்து 70 ஆக உயர்வடைந்துள்ளது.

8 ஆயிரத்து 925 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம், நேற்றைய தினம் 785 கொவிட் 19 நோயாளர்கள் குணமடைந்தனர்.

இதன்படி, நாட்டில் இதுவரையில் 25 ஆயிரத்து 652 நோயாளர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை ஹப்புத்தளை - பிட்டரத்மலையை சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளது.

குறித்த பெண் கொழும்பு , கொச்சிக்கடை பகுதியிலிருந்து பிட்டரத்தமலைக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து கடந்த 14 ஆம் திகதி அவருக்கு பீ சிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று கண்டறியப்பட்டதாக ஹப்புத்தளை பொது சுகாதார பரிசோதகர் ரோய் விஜேசூரிய தெரிவித்தார்.

இந்த நிலையில் அவரை இன்றைய தினம் காலி கொரோனா சிகிச்சை முகாமுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பீ.சி.ஆர் பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளமையால் கொழும்பு மாநகர எல்லை பகுதியில் அடையாளம் காணப்படும் கொவிட் -19 நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொழும்பில் கொவிட்19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் விரைவாக முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.