கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதோரின் எண்ணிக்கை 25,000 ஐ கடந்தது..!

கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதோரின் எண்ணிக்கை 25,000 ஐ கடந்தது..!

கொவிட் தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் 785 பேர் குணமடைந்ததை அடுத்து, இலங்கையில்  குணமடைந்து சிகிச்சைமையங்களில் இருந்து வெளியேறியோர் எண்ணிக்கை 25,000 கடந்துள்ளது.

தற்போது 25,652 பேர் இந்த நோயில் இருந்து பூரணமாக குணமடைந்திருப்பதாக, தொற்றுநொயியல் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி 8,312 பேர் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இன்று யாழ்ப்பாண மருத்துவபீட ஆய்வுகூடத்தில் சங்கானை சந்தை வர்த்தகர்கள் 100 பேருக்கு பீ.சீ.ஆர். பரிசோதனை செய்யப்பட்டது.

அவர்களில் 8 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டதாக, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதன்படி சங்கானையில் 4 பேருக்கும், உடுவில்லில், பண்டத்தரிப்பு, மானிப்பாய், வடலியடைப்பு ஆகிய இடங்களில் ஒவ்வொருவருக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பொதுச் சந்தையில் பி.சி.ஆர் பரிசோதனைக்காக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகள் 313 பேரின் மாதிரிகள் இன்று பெறப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடுமுழுவதும் எழுமாறாக தெரிவு செய்யப்படுவோரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதில் ஒரு அங்கமாகவே இன்றையதினம் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகளின் மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிக எண்ணிக்கையானவர்களுக்கு சிகிச்சை மற்றும் வசதி வழங்க கூடிய வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்று கொவிட்-19 சிகிச்சை மையங்களாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் கொவிட்-19 பரவல் தடுப்பு செயலணியின் செயற்பாட்டு பகுப்பாய்வு குழு கூட்டம் இன்று முற்பகல் நடைபெற்றது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் நாளாந்தம் 500 முதல் 600 வரையான நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

அவர்களுக்கான சிகிச்சை மையங்களை விரைவாக உருவாக்குவது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு இதற்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டை சுகாதார அமைச்சு வழங்கவுள்ளதோடு மேலதிக ஒதுக்கீடுகள் உலக வங்கி அல்லது ஆசிய அபிவிருத்தி வங்கிகளின் நிதியில் இருந்து பெற்று கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, வெலிசறை - மார்பு நோய் வைத்தியசாலையில் இருந்து நேற்று இரவு தப்பிச் சென்ற கொவிட்19 நோயாளி, இன்று மருதானையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவர் மீண்டும் வெலிசறை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.