உயர்நீதிமன்ற கட்டிட தீப்பரவல் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள்..!
கொழும்பு - புதுக்கடை உயர்நீமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மூன்று குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
நேற்று மாலை 4.45 அளவில் கொழும்பு உயர் நீதிமன்றம் அமைந்துள்ள கட்டட தொகுதியில் சிதைவுற்ற பொருட்கள் களஞ்சியசாலையில் தீப்பரவல் ஏற்பட்டது.
இதையடுத்து, கொழும்பு தீயணைப்பு படைப்பிரிவின் 9 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த தீப்பரவல் காரணமாக உயர்நீதிமன்ற ஆவண காப்பகத்தின் வழக்கு கோப்புகளுக்கோ அல்லது ஆவணங்களுக்கோ பாதிப்பு ஏற்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
துறைசார் நிபுணர்களை சம்பவ இடத்திற்கு அழைத்து, விசேட கருத்துக்களை பெற்றுக்கொள்ள காவல்துறை எதிர்பார்க்கிறது.
இதேநேரம், இந்த தீயினால் உயர் நீதிமன்றத்தின் எந்தவொரு அலுவலகத்திற்கோ அல்லது கோப்புகள் உள்ளிட்ட எந்தவொரு பொருட்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிதைவுற்ற பொருட்கள் களஞ்சியசாலை, உயர்நீதிமன்றம் அமைந்துள்ள பிரதான கட்டடத்தின் பின்புறத்தில் அமைந்துள்ள கட்டடத்தின் தரைத் தளத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இந்த தீயின் மூலம் சிதைவுற்ற பொருட்கள் களஞ்சியசாலை மாத்திரமே பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்..
குறித் தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் வெளியாகவில்லை என்பதுடன், இது தொடர்பில் விரைவாக விசாரணைகளை மேற்கொள்ளும் நடவடிக்கையை குற்றப்புலனாய்வு திணைக்களததிடமும், அரச இரசாயன பரிசோதனை திணைக்களத்திடமும் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.