தொற்றாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கை பூர்த்தியாகவில்லை – GMOA
கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் பூர்த்தியாகாத நிலையிலேயே கொழும்பின் ஆறு தொடர்மாடி குடியிருப்புக்களின் தனிமைப்படுத்தல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று தனிமைப்படுத்தல் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட வீடமைப்பு தொகுதிகள் தொடர்பிலேயே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஹரித அளுத்கே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
வீடமைப்பு தொகுதிகளில் வாழும் ஏனைய மக்கள் தங்கள் நாளாந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்காகவே தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டது.
இந்தப் பகுதியிலுள்ள அனைத்து நோயாளிகளையும் அடையாளம் காண்பதற்கு பல நாள்களாகலாம்.
தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் அந்த வீடமைப்பு தொகுதிகளில் வாழ்பவர்கள் மேலும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும்.
வீடமைப்பு தொகுதிகளில் வாழ்பவர்கள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவசிய தேவைகளுக்காக மாத்திரம் வீடுகளிலிருந்து வெளியே செல்லவேண்டும் எனத் தெரிவித்தார்.