இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்ற 30 பேருந்துகளின் அனுமதி பத்திரங்கள் இரத்து

இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்ற 30 பேருந்துகளின் அனுமதி பத்திரங்கள் இரத்து

கடந்த மூன்று வார காலப்பகுதியில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்ற 30 பேருந்துகளின் அனுமதி பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

பேருந்து சேவைகள் மற்றும் வாகன ஒழுங்குவிதிகள் இராஜாங்க அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

காவற்துறை மற்றும் மாகாண பயணிகள் போக்குவரத்து காரியாலயம் ஒன்றிணைந்து தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள கொரோனா வைரஸ் பரவலை கருத்திற்கொண்டு இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைவாக பொதுப்போக்குவரத்துகளில் பயணிகளை ஏற்றிச்செல்லுமாறு அண்மையில் சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டிருந்தது.

அதற்காக 1.2 வீத கட்டணத்தை அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சினால் அனுமதியும் வழங்கப்பட்டது.

எவ்வாறாயினும், சுகாதார பரிந்துறைகளின் அடிப்படையில் பயணிகள் போக்குவரத்தை முன்னெடுப்பதற்கு தாம் முன்வைத்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என பேருந்து சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

தமது தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினை மீள கட்டியெழுப்புவதற்கு தற்போது வழங்கப்பட்டுள்ள கட்டண அதிகரிப்பானது போதுமானதாக அமையவில்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

எனவே இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் சேவை அனுமதி பத்திரத்தை இரத்து செய்வதற்கு அதிகாரிகளுக்கு சட்ட ரீதியான எந்தவொரு ஏற்பாடுகளும் இல்லை எனவும் கெமுனு விஜேரட்ன குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சுகாதார வழிமுறைகளை புறந்தள்ளி பேருந்து சேவையினை முன்னெடுப்பதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்