மஹர சிறைச்சாலையில் நடந்தது என்ன? நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த நீதியமைச்சர்

மஹர சிறைச்சாலையில் நடந்தது என்ன? நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த நீதியமைச்சர்

மஹர சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பான அறிக்கையினை நீதிமையச்சர் அலி சப்ரி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் விசேட குழுவின் இடைக்கால அறிக்கை இன்று நீதியமைச்சர் அலி சப்ரியினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் இதுவரை 116 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்த நிலையில், ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையினை சமர்ப்பித்து உரையாற்றிய அமைச்சர்,

கடந்த சில நாட்களாக மஹர சிறையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நீதி அமைச்சு என்ற வகையில் எம்மிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதுத் தொடர்பில் ஆராய்வதற்காக 5 உறுப்பினர்களை கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவின் இடைக்கால அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது.

ஒரு வாரத்தில் அறிக்கை ஒன்றை சமர்பிப்பதாகவும் நான் தெரிவித்திருந்தேன். இதற்கமைய அறிக்கையை பெற்றுக்கொண்டுள்ளோம். இந்த சம்பவத்தின் பின்னணி, ஆய்வு, குழுவின் பரிந்துரைகள் உள்ளிட்ட விடயங்கள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனை நான் சபையில் சமர்பிக்கின்றேன்.

இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை செயற்படுத்தவும் நாம் நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றார்.