இராணுவ மேஜருக்கான இழப்பீட்டை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு..!
மலேரியா நோய்க்காக வழங்கப்பட்ட ஒளடதம் காரணமாக முழுமையாக கண்பார்வையை இழந்த இராணுவ மேஜர் ஒருக்கு இழப்பீட்டை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இராணுவத் தளபதிக்கு உத்தரவிட்டுள்ளது
தெஹிவளை தொடரூந்து நிலைய வீதியை சேர்ந்த குறித்த மேஜர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நிறைவடைந்து தீர்ப்பை வழங்கும் போதே மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மஹிந்த சமயவத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்
இந்த மனுவில் பிரதிவாதிகளாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்ர சில்வா, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன உள்ளிட்ட மூவர் பெயரிடப்பட்டிருந்தனர்.
சேவையில் ஈடுபட்டிருந்த வேளை மலேரியா நோய்க்காக வழங்கப்பட்ட ஒளடதத்தின் பக்க விளைவு காரணமாக தாம் கண்பார்வையை இழந்ததாக 2016 ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் 16 ஆம் திகதி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்
மனுதாரர் கண்பார்வையை இழந்ததாக பரிந்துரை செய்து சேவையில் இருந்து ஒய்வு பெற்றுள்ளதால் அரச நிர்வாக சுற்றுநிருபத்திற்கு அமைய இழப்பீட்டை கோரியுள்ள போதும் திடீர் அனர்த்தத்தால் கண்பார்வை இழக்கப்படவில்லை என கூறி மனுதாரருக்கு இழப்பீட்டை வழங்க அப்போதிருந்த இராணுவத் தளபதி மறுத்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன், அவருக்கு இழப்பீட்டை வழங்குமாறு குறித்த குழுவும் பரிந்துரை செய்தது.
எனினும் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போதிருந்த பாதுகாப்பு செயலாளரால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இழப்பீட்டு சுற்றுநிருபத்தால் அவருக்கு இழப்பீட்டை வழங்க முடியாமல் போயிள்ளது.
இவற்றை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மனுதாரர் மனுவை தாக்கல் செய்த இரண்டு வருடங்களுக்கு பின்னரே புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டது.
எனவே இராணுவ மேஜருக்கான இழப்பீட்டை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது