கொரோனாவை ஒழிக்கும் ஒளடதத்தை விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்..!

கொரோனாவை ஒழிக்கும் ஒளடதத்தை விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்..!

கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தக் கூடியது என கூறி உள்ளூர் ஒளடதத்தை பொதுமக்களுக்கு விநியோகிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கேகாலையில் தம்மிக்க பண்டார என்பவரினால் இந்த ஒளடதம் கண்டுபிடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது.

இதனை அவர் நேற்றைய தினம் கேகாலை - உடுமாகம பகுதியில் உள்ள காளி கோயில் வளாகத்தில் வைத்து பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகித்தார்.

அதனை பெற்றுக் கொள்வதற்காக சுகாதார ஒழுங்கு விதிகளை மீறி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கேகாலை பகுதிக்கு சென்றனர்.

இதன்போது சுகாதார ஒழுங்கு விதிகள் மீறப்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கேகாலை சிரேஷ்ட காவல்துறை அதிகாரிக்கு இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண நேற்று தெரிவித்தார்

குறித்த பகுதியில் ஏற்பட்ட நிலைமையுடன் ஒளடதத்தை உற்பத்தி செய்த தம்மிக்க பண்டாரவுக்கும், பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கும் இடையில் நேற்றைய தினம் கேகாலை மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது

இதன் பின்னரே  இந்த மருந்தை விநியோகிக்கும் பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் அந்த ஒளடதத்தை மேலும் தயாரிக்க வேண்டிய அவசியம் இருக்கின்றமையினால், அதனை விநியோகிப்பதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினத்தில் மாத்திரம் சுமார் 7 ஆயிரத்து 600 குடும்பங்கள் இந்த ஒளடதத்தை பெற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒளடதத்தின் மூலம் கொரோனா நோயாளர்கள் குணமடைவதாக அதனைத் தயாரித்த தம்மிக்க பண்டார தெரிவிக்கின்றபோதும், பொறுப்புவாய்ந்த தரப்பினரால் அது விஞ்ஞான ரீதியாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

இந்த ஒளடதம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதன் முடிவுகள் வெளியானதன் பின்னர் குறித்த ஒளடதத்தை மீண்டும் விநியோகிக்க நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் தம்மிக்க பண்டார இணக்கம் தெரிவித்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.