இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பாகிஸ்தான் யுவதி - இருவர் கைது
இலங்கையில் தங்கியிருந்த பாகிஸ்தான் யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரு பாகிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 18 வயதான யுவதி ஒருவரின் வீட்டுக்கு நேற்றைய தினம் சென்ற பாகிஸ்தான் நாட்டு பிரஜைகள் இருவர் யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக கல்கிஸை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த குறித்த யுவதி அகதி அந்தஸ்தை கொண்டுள்ளார்.
இந்த முறைப்பாட்டின் பிரகாரம், குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் கல்கிஸை பொலிஸார் கைது செய்து, நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.
விசாரணைகளை அடுத்து, குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட யுவதி மற்றும் சந்தேகநபர்கள் பாகிஸ்தான் பிரஜைகள் என்பதனால், உருது மொழி பெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் வாக்குமூலம் பதிவு செய்துக்கொள்ளப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குறித்த இரண்டு சந்தேகநபர்களும், யுவதியின் தந்தையினுடைய நண்பர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட யுவதி, களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.