
ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை சம்பவ வழக்கு ஒத்திவைப்பு..!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஆறு பேர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015 ஆண்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று குறித்த வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இன்று வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பயங்கரவாத தடுப்பு பிரிவினர் உரிய ஆவணங்களை கொண்டுவராமை காரணமாக அரச தரப்பு சட்டத்தரணி விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் வழக்கு ஜனவரி மாதம் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.