மஹர சிறைச்சாலை சம்பவ வழக்கினை இன்றைய தினம் விசாரணைக்கு எடுக்குமாறு கோரிக்கை..!
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த கைதிகளின் சடலங்களை தகனம் செய்வதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்ப்பு வழங்குவதற்காக எதிர்வரும் 11 ஆம் திகதி எடுத்து கொள்ளப்படவுள்ள வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் கோரியுள்ளது.
வத்தளை நீதவான் நீதிமன்றில் மனுவொன்றின் ஊடாக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது
இதற்கமைய அந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அனைத்து உயிரிழப்புக்களும் இயற்கையாக ஏற்படாத சந்தேகத்திற்கிடமான மரணம் எனவும் தற்போதைய கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கமைய சடலங்களை தகனம் செய்தால் அந்த மரணம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அது தடையாக அமையும் என சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு நீதிமன்றில் தெரிவித்திருந்தது.
இதன்படி இது தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் 11 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 11 கைதிகள் பலியாகினர்.
அதில் 7 பேரின் சடலங்கள் தற்போது அடையாளங் காணப்பட்டுள்ளன.
ஏனைய சடலங்கள் அடையாளங் காணப்படவில்லை எனவும் கைவிரல் அடையாளம் மற்றும் மரபணு பரிசோதனைகள் மூலம் அவர்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் 145 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.