>PHI உத்தியோகத்தர்களின் பாதுகாப்பிற்கு இராணுவத்தினரும் காவல் துறையினரும்..!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியான 703 பேரில் 371 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 192 பேர் பொரளை பகுதியை சேர்ந்தவர்கள் என கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்து 706 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது
அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 102 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 64 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 51 பேருக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 46 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 22 பேருக்கும் நேற்றைய தினம் தொற்றுறுதியாகியுள்ளது.
இதேவேளை, முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 40 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரை குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் ஆயிரத்து 151 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு - காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கொவிட் 19 நோயாளர்களில் 70 பேர் நேற்றைய தினம் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு குணமடைந்துள்ளவர்களில் பலர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 59 கொவிட் நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அட்டுலுகம பகுதியில் நேற்று முதல் மீண்டும் பி.சீ.ஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
பொது சுகாதார பரிசோதகர்கள் தமது கடமைகளை முன்னெடுப்பதற்காக காவல்துறை மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
அட்டுலுகம பகுதியில் அண்மையில் பி.சீ.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள சென்ற பொது சுகாதார பரிசோதகர் மீது ஒருவர் எச்சில் உமிழ்ந்த காரணத்தால் குறித்த நடவடிக்கை பாதிக்கப்பட்டிருந்தது
இந்தநிலையில் மீண்டும் பி.சீ.ஆர் பரிசோதனை பரிசோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போதும் அந்த பகுதி மக்கள் உரிய வகையில் ஒத்துழைப்புக்களை வழஙகுவதில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய நாளை முதல் பொது சுகாதார பரிசோதகர்கள் தமது கடமைகளை முன்னெடுக்கும் போது அவர்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினரும் இராணுவத்தினரும் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.