நாட்டில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்வு..!

நாட்டில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்வு..!

நாட்டில் நேற்றைய தினம் இரண்டு கொவிட்19 மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி நாட்டில் இதுவரையில் பதிவான கொவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்வடைந்துள்ளது

சரியாக வதிவிடம் கண்டறியப்படாத கொழும்பை சேர்ந்த 62 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டநிலையில் அங்கு நேற்றைய தினம் உயிரிழந்தார்.

கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு -13 ஜெம்பட்டா வீதியைச் சேர்ந்த 77 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் அந்த வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்தார்.

அவரது , மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்று மற்றும் நீரிழிவினால் குருதி விசமானமையாகும் என சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 703 பேருக்கு கொவிட்19 தொற்றுதியானது.

அவர்களில் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய 466 பேருக்கும், சிறைச்சாலை கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடைய 237 பேருக்கும் நேற்று கொவிட்19 தொற்று கண்டறியப்பட்டது.

இதனையடுத்து நாட்டில் இதுவரை கொவிட்19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 580 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை, பேலியகொடை மீன் சந்தை மற்றும் சிறைச்சாலை ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடைய நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 25 ஆக உயர்வடைந்துள்ளது

இதேவேளை நேற்றைய தினம் 344 கொவிட்19 நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

நாட்டில் இதுவரை இந்த தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 804 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் 7 ஆயிரத்து 634 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை, நமுனுகுல - கனவரல்ல 13 ஆம் கட்டை பகுதியில் 195 பேருக்கு இரண்டாவது முறையாகவும் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அங்கு, மேற்கொள்ளப்படும் பீ.சி. ஆர் பரிசோதனைகளது முடிவுகளின் அடிப்படையில் அந்த பகுதியை விடுவிப்பதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும் என பசறை - மவுஸாக்கலை சுகாதார பரிசோதகர் வீ.ராஜதுரை தெரிவித்தார்.

அதேநேரம் , அங்கு முன்னதாக தொற்றுறுதியானவர்களில் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நமுனுகுல - கனவரல்ல 13 ஆம் கட்டை பகுதியில் மாத்திரம் இதுவரை 16 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியானதுடன் அங்கு 96 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பசறை - மவுஸாக்கலை சுகாதார பரிசோதகர் வீ.ராஜதுறை தெரிவித்தார்.

இதேவேளை, அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 25 பேருக்கு நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அம்பகமுவ மேலதிக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.காமதேவன் இதனை குறிப்பிட்டார்.

இதற்கமைய பிளக்வோட்டர் மேற்பிரிவில் முன்னதாக 24 பேருக்கு தொற்றுறுதியாகியிருந்த நிலையில் அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில் மேலும் 14 கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் எழுமாறாக பிளக்வோட்டர் கீழ்பிரிவில் மேற்கொள்ளப்பட்ட 18 பி.சீ.ஆர் பரிசோதனைகளில் 5 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.