மன்னாரில் கிராம அலுவலகர் படுகொலை- நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு!
மாந்தை மேற்கில் கிராம அலுவலகர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர் வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் எம்.கணேசராஜா இன்று உத்தரவிட்டார்.
மாந்தை மேற்கில் கொலை செய்யப்பட்ட கிராம அலுவலகர் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போதே சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
கடந்த தவணையின் போது குறித்த வழக்கு விசாரனையை குற்றப்புலனாய்வு பிரிவினர் பாரமெடுத்துள்ளனர். குறித்த வழக்கு விசாரணை பொலிஸாரிடம் இருந்து சீ.யை.டிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் மன்றில் முன்னிலையான குற்றப்புலனாய்வு பிரிவினர் அவர்கள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் பல்வேறு தரப்பினரிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைவாக அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் சுருக்க குறிப்பினையும், மூன்று சான்றுப் பொருட்களையும் மன்றில் பாராப்படுத்தியுள்ளனர்.
கிராம அலுவலகர் கொலை செய்யப்பட்ட போது பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், மோட்டார் சைக்கிளின் உடைந்த கைப்பிடி, கருப்பு நிற தலைக்கவசம் (கெல்மட்) ஆகிய மூன்று சான்றுப்பொருட்களும் இவ்வாறு மன்றில் பாராப்படுத்தப்பட்டன.
மேலும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் தமது விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், அதற்கு தமக்கு போதிய அளவு கால அவகாசம் தேவை எனவும் மன்றில் தெரிவித்தனர்.
இந்த நிலையில் குறித்த சந்தேக நபரை எதிர் வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் எம்.கணேசராஜா இன்று உத்தரவிட்டார்.