அண்மையில் கண்டியில் ஏற்பட்டது சிறிய அளவிலான ஒரு நிலநடுக்கமே – சுற்றாடல் அமைச்சு தெரிவிப்பு
நேற்று முன் தினம் கண்டியை அண்மித்த பகுதிகளில் நான்கு சிறிய அளவிலான நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் பூமியின் உட்புறத்தில் ஒரு சிறிய அளவிலான அதிர்வே ஏற்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவிக்கின்றது
இந்நிலநடுக்கமானது நேற்று முன் தினம் கண்டி திகன, அளுத்வத்தை மற்றும் அம்பகொட்டை போன்ற பிரதேசங்களில் பதிவாகியுள்ளது.
இதில் ஒரு அதிர்வு மாத்திரம் மஹகனதராவ பல்லெகெலே நிலஅதிர்வு நிலையங்களில் பதிவாகியுள்ளது.
பூமியின் உட்புறத்தில் ஏற்படும் அதிர்வுகள், நில அதிர்வு நிலையங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நில அதிர்வு மானிகளில் மாத்திரமே பதிவாகுமென சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அணையில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்களில் இதனை அளவிட முடியாது என்றும் சுற்றாடல் அமைச்சு தெரிவிக்கின்றது.
எவ்வாறெனினும் சிறு அதிர்வுகள் மூன்றும் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் சென்சார்களில் பதிவாகியுள்ளமையால் அது பூமியின் உட்புறத்தில் ஏற்பட்டதல்ல எனவும் பூமியின் மேற்பரப்பில் ஏற்பட்ட யாதேனும் ஒரு அதிர்வு காரணமாக ஏற்பட்ட நில நடுக்கமாக இருக்கலாமென புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் இவ்வாறு அடிக்கடி ஏற்படும் சிறு நில நடுக்கங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுற்றுச் சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர உரிய பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.