இலங்கையில் இரண்டாவது அலைக்கு காரணம் என்ன? தொடரும் சர்ச்சை
இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஆரம்பமாகிய மினுவாங்கொடை – பிரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை கொத்தணியில் எவ்வாறு வைரஸ் ஏற்பட்டது என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க இது குறித்து இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
ஒரே தடவையில் ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளர்கள் மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் கண்டுபிடிக்கப்பட்டமையானது அங்கு ஆரம்பத்திலிருந்தே தொற்று இருந்திருப்பதை அறிய முடிகிறது.
அந்த தொழிற்சாலையில் உள்ள மருத்துவ அதிகாரி, ஊழியர்கள் சுகயீனமாகின்ற போது வில்லைகளை வழங்கியமை, வாந்தி உட்பட அறிகுறிகள் ஏற்பட்டபோதும் அதனைப் பொருட்படுத்தாமல் வேலைக்கு ஊழியர்களை அனுமதித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களும் உள்ளன.
அதேபோல இதுதொடர்பில் விசாரணை செய்த இரகசிய பொலிஸாரில் பலருக்கும் தொற்று ஏற்பட்டது. தற்போது நாட்டில் 27 ஆயிரம் கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
ஆகவே இதன் மூலம் எங்கே இருந்தது என்பதை அரசாங்கம் கண்டுபிடித்து அறிவிக்க வேண்டும். சட்டமா அதிபரினால் கோரப்பட்ட விசாரணைக்கு என்ன ஆனது என்பதையும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.
மீண்டுமொரு கொரோனா கொத்தணி நாட்டிற்குள் உருவாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்தக் கோரிக்கைகளுக்கு பதிலளித்த கொவிட் ஒழிப்பு பற்றிய இராஜாங்க அமைச்சர், மருத்துவர் சுதர்சனி பெர்ணான்டோபுள்ளே,
வெளிநாட்டிலிருந்து நாட்டிற்குள் வந்த சீதுக ரமாடா விடுதியில் தங்கியிருந்த யுக்ரைன் விமானப் பணிக்குழாமைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று ஏற்பட்டிருந்ததுடன், அந்த விடுதியிலிலும் அது பரவியது.
விடுதி ஊழியர்களிடத்திலிருந்து ஆடைத்தொழிற்சாலைக்கு ஏதோ வழியில் பரவியுள்ளது.
தற்போது பரவுகின்ற கொரோனா தொற்றின் வீரியமானது அதிகம் என்பதுடன், ஐரோப்பிய நாடுகளில் பரவுகின்ற தொற்றுக்கு ஒப்பானது என்பது ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது.
சட்டமா அதிபரினால் பொலிஸ்மா அதிபருக்கு விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ள நிலையில், விசாரணை தொடர்கின்றது.
அவசர கொரோனா கொத்தனி மீண்டும் ஏற்படாமல் இருக்க அனைத்து பிரதேசங்களிலும் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதிலும் திடீர் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
பிரதான அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவுகளிலும் இந்த பரிசோதனை இடம்பெறுகிறது என்றார்.