ஸ்ரீலங்கா கடற்பரப்பிற்குள் அத்துமீறும் பிற நாட்டவர்கள் தொடர்பில் உடனடி நடவடிக்கை!
ஸ்ரீலங்கா கடற்பரப்புக்குள் பிற நாட்டவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். தென்னிலங்கையின் கலமெடிய மீன்பிடி துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டு நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துக் கொண்டிருந்தார். இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
குறுகிய காலத்தில் 379.53 மில்லியன் செலவில் கலமெடிய மீன்பிடி துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டது. ஸ்ரீலங்கா அரசியல் வரலாற்றில் பல பிரதான கட்சிகள் ஆட்சியதிகாரம் செலுத்தியுள்ளன. ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் கலமெடிய மீன்பிடி துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன.
ஸ்ரீலங்காவில் தற்போது 22 மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மீன்பிடி கைத்தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடல்சார் கைத்தொழில் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவாக காணப்பட்டாலும் பிற நாடுகளில் இருந்து மீன் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. இந்த நிலையில் ஸ்ரீலங்கா கடற்பரப்பில் பிற நாட்டவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுப்படுகிறார்கள். இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடல்வளங்களை பாதுகாக்க அரசாங்கம் சிறந்த திட்டம் வகுத்துள்ளது.
விவசாயத்துறைக்கும், மீன்பிடி கைத்தொழிலுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். மீன்பிடி கிராமங்கள் பல அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. மொறட்டுவ, அம்பாந்தோட்டை, உள்ளிட்ட பெரும்பாலான மீன்பிடி கிராமங்களில் வாழும் மீனவர்களுக்கு நிரந்தர வீடு வழங்கப்பட்டுள்ளன.
30 வருடகால யுத்தத்தினால் வடக்கு மக்களின் பிரதான வாழ்வாதாரமான மீன்பிடி கைத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வடக்கில் மீன்பிடி கைத்தொழில் மேம்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.