இன்றைய கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்கள்
நாட்டில் மேலும் 362 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களில் 285 பேர் பேலியகொடை தொத்தணியுடன் தொடர்புடையவர்களுடன் ஏனைய 77 பேரும் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய சிறைச்சாலை கொத்தணியில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2,051 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 27,590 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 6,993 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் கொவிட் 19 நோய்த்தொற்றில் இருந்து இன்றைய தினம் மேலும் 370 பேர் குணமடைந்துள்ளனர்.
தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி இந்த நோயில் இருந்து குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியோர் எண்ணிக்கை 20,460 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தினை நாளை முதல் காலவரையறையின்றி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பிரதேச மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி டி.சந்திரராஜன் இதனை தெரிவித்துள்ளார்.
நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் சேவையாற்றும்; ஆசிரியை ஒருவருக்கும் அவரது பிள்ளைகள்; இருவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழ் உள்ள பொகவந்தலாவை ஆரியபுர பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேருக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது.
குறித்த ஆசிரியை கடந்த 28ம் திகதி மற்றும் 30ம் திகதியும் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் சுமார் 1500 மாணவர்கள் கல்வி பயில்வதுடன், 76 ஆசிரியர்கள் சேவையாற்றி வருகின்றனர்.
இதனால் அந்த பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட 72 ஆசிரியர்களையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த ஆசிரியையுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய 100 மாணவர்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த ஆசிரியை நெருங்கி பழகிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நாளைய தினம் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதேவேளை பாடசாலை மற்றும் பாடசாலை வளாகத்தை தொற்று நீக்கம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைக்கு உட்பிரவேசிக்க கூடாது எனவும் அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை, இதேவேளை, கொரோனா வைரஸ் 2ஆவது அலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 208 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் இமேஷ் பிரதாபசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுமார் 4 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சுமார் 311 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் அட்டன், வெளிஓயா தோட்டத்தில் தண்டுகள பிரிவு, பொகவந்தலாவ பொகவன பகுதியில் குயினா தோட்டம், கினிகத்தேனை பிளக்ஹோட்டர் தோட்டம் ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மறுஅறிவித்தல் வரை இந்த பகுதிளுக்கான தனிமைப்படுத்தல் நடைமுறைகள் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கண்டி - பன்விலை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பன்விலைவத்த கிராமத்தில் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
கடந்த 30 ஆம் திகதி கொழும்பில் இருந்து வருகை தந்த அவருக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டதால் தாமானவே முன்வந்து பன்விலை சுகாதார நிலையத்தின் ஊடாக பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்ளாகியுள்ளார்.
இந்தநிலையில் அவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதை அடுத்து தெல்தெனிய கொரோனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
அத்துடன் அவருடன் தொடர்பினை பேணியவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூடத்தி; மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில் 3 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களுக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக யாழ்ப்பாண போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் தா.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மலையகத்தில் கொவிட் 19 அச்சுறுத்தல் தீவிரமாகி வருகின்ற நிலையில் அது தொடர்பில் அதிபர்கள் கரிசனையுடன் உரிய தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை கல்வி சமூக சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் பொதுச் செயலாளர் சங்கர மணிவண்ணண் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.