சிறைச்சாலைகளின் நெரிசலை குறைக்க வேண்டும்-இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

சிறைச்சாலைகளின் நெரிசலை குறைக்க வேண்டும்-இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

மஹர சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற குழப்பநிலைமை போன்று, ஏனைய இடங்களிலும் ஏற்படாமல் தடுப்பதற்கு, சிறைச்சாலைகளின் நெரிசலை குறைக்க வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இதற்காக விளக்கமறியலில் உள்ளவர்களுக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய கைதிகளின் பிணை கோரிக்கையை விரைவாக ஆராய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் பிணை வழங்கப்படக்கூடிய குற்றங்களுக்காக கைது செய்யப்படுகின்றவர்களை விளக்கமறியலில் வைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கும் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிறைச்சாலையில் நெரிசலை குறைப்பதுடன், புதிய கைதிகளை சேர்க்கும் போது அவர்களுக்கு பீசீஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல், இருக்கின்ற கைதிகளை கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தல் மற்றும் அவர்களுக்கான பிரத்தியேக வசதிகளை வழங்குதல் ஆகியவற்றுடன், அண்மையில் மஹர சிறைக் கலவரத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த கைதிகளின் உறவினர்களுக்கு அவர்கள் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கைதிகளது உறவினர்கள் பலர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை செய்திருந்த நிலையில், கடந்த காலங்களில் மனித உரிமைகள் ஆணைக்குழு சிறைச்சாலைகளில் கண்காணிப்பினை மேற்கொண்டு இந்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தயாரித்துள்ளது.

இதேவேளை, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று வெலிக்கடை சிறைச்சாலைகக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், வெலிக்கடை சிறைச்சாலை கட்டடத்தின் கூரைமீதேறி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் இன்றைய தினம் அதனை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக குறிப்பிட்டார்.

இதன்போது சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் நிலையை குறைப்பதற்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை தொடர்பிலும், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இதன்போது விளக்கமளித்தார்.

இதேநேரம், பிணை நிபந்தனையை நிறைவேற்ற முடியாமலும், பிணை பணத்தை செலுத்த முடியாமலும் உள்ள அனைத்து கைதிகளுள், 8 ஆயிரம் கைதிகளை டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியளவில் விடுதலை செய்ய தாங்கள் எதிர்பார்ப்பதாகவும், அந்த தகவலை வழங்குவதற்காக இன்று அங்கு சென்றதாகவும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

இதேநேரம், கூரைமீதேறி போராட்டம் நடத்தும் கைதிகள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அவர்கள் தற்போது கூரைமீதிருந்து இறங்கிவிட்டதாக தெரிவித்தார்.

புனர்வாழ்வு முறைகள் உள்ளதுடன், சிறைச்சாலைகளுக்குள் ஒவ்வொரு முறைமைகள் உள்ளன.

அது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து தங்களுக்கு அறிக்கை கையளிப்பதாகவும், அதன் அடிப்படையில் கைதிகளை தாங்கள் விடுவிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த குறிப்பிட்டுள்ளார்.

நான்கு ஆண்டுகால மீளாய்வு அறிக்கையை அவர்கள் நீதி அமைச்சுக்கு அனுப்புவார்கள்.

அதன்பின்னர் அவர்களுக்கு விடுதலை வழங்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்

இதேநேரம், மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மஹரயில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும், அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் நிலையை குறைப்பதற்கான நடவடிக்கை என்ன என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர், விடுதலை செய்வதாகவும் என குறிப்பிட்டார்.

தற்போது 28 சிறைச்சாலைகளில் சுமார் 28 ஆயிரம் கைதிகள் உள்ளனர்.

அவர்களில் 8 ஆயிரம் பேரை விடுதலை செய்ய தாங்கள் எதிர்பார்ப்பதாகவும், அப்போது நெரிசல் நிலை குறைவடையும் என்றும் அவர் கூறினார்

போதைப்பொருள் பயன்பாட்டினால் தற்போது நீதிமன்றத்திற்கு வருபவர்களை, தாங்கள் சிறைப்படுத்துவதில்லை என்றும், புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்புவதாகவும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும் பாதுகாப்பு வழங்க போதுமான அதிகாரிகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.