நமுனுகுல-கனவரல்ல 13 ஆம் கட்டை பகுதியில் இதுவரை 14 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதி

நமுனுகுல-கனவரல்ல 13 ஆம் கட்டை பகுதியில் இதுவரை 14 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதி

நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 521 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 342 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் கண்டி மாவட்டத்தில் 91 பேரும் களுத்துறை 44 பேரும் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

மேலும் நேற்று தொற்றுறுதியானவர்களில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த மூன்று பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றதது.

இதற்கமைய பேலியகொட மற்றும் மினுவாங்கொடை கொத்தணிகளுடன் தொடர்புடைய 23,001 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் 16,030 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

நாட்டில் நேற்று தொற்றுறுதியானவர்களுடன் சேர்ந்து தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 26,558 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 19,427 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் தொற்றுறுதியான 6,991 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

அத்துடன் நேற்று கொரோனா நோயாளர் ஒருவர் மரணித்தமையை அடுத்து மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நமுனுகுல - கனவரல்ல 13 ஆம் கட்டை பகுதியில் இன்றைய தினம் 122 பேருக்கு இரண்டாவது முறையாக பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பசறை-மவுஸாக்கலை சுகாதார பரிசோதகர் வீ.ராஜதுறை தெரிவித்தார்.

அத்துடன் , அந்த பகுதியில் தற்போது 96 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ. ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் இன்று கிடைக்கப்பெறவுள்ளன.

அதன் முடிவுகளின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என பசறை - மவுஸாக்கலை சுகாதார பரிசோதகர் வீ.ராஜதுறை தெரிவித்தார்.

நமுனுகுல-கனவரல்ல 13 ஆம் கட்டை பகுதியில் மாத்திரம் இதுவரை 14 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளது

இதேவேளை, கொவிட்-19 காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 465 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய அபுதாபியில் இருந்து 82 பேரும், கட்டாரில் இருந்து 48 பேரும், இந்தியாவில் இருந்து 45 பேரும் நாட்டை வந்துள்ளனர்.

அத்துடன், கட்டாரில் இருந்து 288 பேரும் சீனாவில் இருந்து இரண்டு பேரும் மாலைத்தீவில் இருந்து 33 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை, முகக்கவசம் அணியாமை தொடர்பில் இதுவரை 1,027 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்திய பகுதிகளில், கண்காணிப்புக்காக காவல்துறையினர் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.