மஹர சிறை மோதல் சம்பவம்- இதுவரை 78 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தகவல் (காணொளி)
மஹர சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோதலில் மரணித்த கைதிகள் இருவரின் சடலங்கள் அவர்களது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
அவர்களில் ஒருவர் ஜா-எல பகுதியை சேர்ந்தவர் என்பதோடு ஜா-எல காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றுமொருவர் வத்தளை - ஹூனுப்பிட்டி பகுதியை சேர்ந்தவர் என்பதோடு அவர் கிரிபத்கொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டராவார்
அவர்கள் இருவரும் போதை பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் என காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அத்துடன் இந்த மோதல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் இதுவரையில் 78 பேரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, குறித்த பதட்டநிலைமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நீதியமைச்சர் அலிசப்ரியினால் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழு இன்று வாக்குமூலம் பெறவுள்ளது.
மஹர சிறைச்சாலையின் அதிகாரிகள், கைதிகள் மற்றும் சிறைச்சாலையை அண்மித்துள்ள பகுதி மக்களிடம் இதன்போது வாக்குமூலம் பெறப்படவுள்ளது.