மஹர சிறை மோதல் சம்பவம்- 6 ஔடத வகைகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள CID -

மஹர சிறை மோதல் சம்பவம்- 6 ஔடத வகைகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள CID

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது கைதிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் 6 ஒளடத வகைகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

சாதாரண சிகிச்சைகளுக்காக பயன்படுத்தாத சுமார் 21,000 மாத்திரைகள் சிறைச்சாலையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது

அவற்றுள் ஆட்டின் உள்ளிட்ட 6 வகையான ஒளடதங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அவதானம் செலுத்தியுள்ளனர்.

அந்த ஒளடதங்கள் விசேட நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அது தொடர்பான நிபுணத்துவ அறிக்கை பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார்.

தமது கணவர் காணாமல் போயுள்ளதாக கூறி இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

எனது கணவர் சிறையில் உள்ளாரா இல்லை என்பது தொடர்பில் உரிய தகவல்கள் வழங்கப்படுவதில்லை

மரணித்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பான ஆவணங்களில் தமது கணவரின் பெயர் இல்லை.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அங்கு சென்று பார்த்தாலும் அவர் தொடர்பான தகவல் இல்லை.

எனவே தமது கணவர் தொடர்பான உரிய விபரத்தை பெற்றுத்தருமாறு காணாமல் போயுள்ளதாக கூறப்படும் கைதியின் மனைவி தெரிவித்துள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 11 கைதிகள் மரணித்துள்ளதுடன் 108 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.