ஆயிரத்து 130 மில்லியன் ரூபா இழப்பு

ஆயிரத்து 130 மில்லியன் ரூபா இழப்பு

இரண்டு முன்னணி எண்ணெய் நிறுவனங்கள் காரணமாக 2013 முதல் 2016 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு 6ஆயிரத்து 130 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பது நாடாளுமன்ற கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது.

இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக குறித்த காலப் பகுதியில் பிழையற்ற இணக்கமான பொருள் விளக்கக் குறியீட்டினை வழங்காமையால் இந்தத் தொகை இழக்கப்பட்டிருப்பதாக கணக்காய்வு திணைக்களத்தின் விசாரணைகளில் புலப்பட்டுள்ளது

நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று வருடங்களில் குறித்த நிறுவனங்களால் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்தை அவற்றிலிருந்து பெற்றுக்கொள்வது தொடர்பான விசாரணைகளை எதிர்காலத்தில் மேற்கொள்ள நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல நடவடிக்கை எடுத்திருந்தார்.

அத்துடன், இலங்கை சுங்கத் திணைக்களமும் இது தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு பரிந்துரைத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விஜித ரவிபிரிய இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 2013ஆம் ஆண்டு முதல் இறக்குமதியாளர்களால் விசேட தேவைக்கான வாகனங்களாக இறக்குமதி செய்யப்பட்டு அவை இரட்டைத் தேவையுடைய வாகனங்களாகப் பதிவுசெய்யப்பட்டமையால் வரியாகப் பெறப்படவேண்டிய 220 மில்லியன் ரூபா அரசாங்கத்துக்கு இழக்கப்பட்டுள்ளமையும் இங்கு வெளியானது.

2010 முதல் 2019 வரையான காலப் பகுதியில் 443 விசேட தேவைக்கான சிற்றூர்ந்துகளுக்காக தலா 3 மில்லியன் ரூபா வீதம் ஆகக் குறைந்தது ஆயிரத்து 300 மில்லியன் ரூபாவை அரசாங்கம் வசூலித்திருக்க முடியும் எனவும் இங்கு தெரியவந்துள்ளது.