நேற்று பதிவான மேலும் நான்கு கொரோனா மரணங்கள்- முழுமையான தகவல்கள்

நேற்று பதிவான மேலும் நான்கு கொரோனா மரணங்கள்- முழுமையான தகவல்கள்

நாட்டில் மேலும் 4 கொவிட்-19 உயிரிழப்புக்கள் நேற்று பதிவாகின.

இதன்படி நாட்டில் இதுவரை கொவிட்19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 74 வயதான ஆண் ஒருவர் கடந்த 29 ஆம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட கிருமி தொற்றாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கொலன்னாவை பகுதியை சேர்ந்த 74 வயதான பெண் ஒருவர் கடந்த 29 ஆம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.

மூலையில் உட்பகுதியில் ஏற்பட்ட இரத்த கசிவுடன் கொவிட்19 தொற்றுறுதியானமையே மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜகிரிய பகுதியை சேர்ந்த 93 வயதான பெண் ஒருவர் கடந்த 28 ஆம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்19 தொற்றினால் ஏற்பட்ட குருதி விசமானமையாகும்.

இதுதவிர, கொழும்பு 10 பகுதியை சேர்ந்த 81 வயதான ஆண் ஒருவர் தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைத்து கொவிட்19 தொற்றுறுதியானவராக அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் நீண்ட காலம் காணப்பட்ட நுரையீரல் நோய் மற்றும் கொவிட்19 தொற்று என்பனவாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் ஏற்பட்ட கொவிட்19 இரண்டாம் அலையில் இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.