
கொரோனா தொற்றுக் காரணமாக பாடசாலைகளுக்குச் செல்ல அச்சப்படும் மாணவர்கள்!
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக நாட்டில் உள்ள பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்டு மூன்றாம் தவணை ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரையிலும் மலையக பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை குறைந்தளவிலேயே காணப்படுகின்றது.
அந்தவகையில், ஹட்டன் கல்வி வலையத்திற்கு உட்பட்ட பொகவந்தலாவ சென்மேரீஸ் மத்திய கல்லூரியில் நூறிற்கும் குறைவான மாணவர்கள் சமுகமளித்துள்ளனர். குறித்த பாடசாலையில் 1, 200 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
பொகவந்தலாவ பிரதேசத்தில் 14 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையினால் அந்த பகுதிகளிலுள்ள மாணவர்களை பாடசாலைக்கு வரவேண்டாம் என பாடசாலை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, ஹட்டன் குயில்வத்தை தமிழ் மகா வித்தியாலயத்தில் 420 மாணவர்கள் கற்று வருகின்ற போதிலும் இன்றையதினம் 10மாணவர்கள் மாத்திரம் சமுகமளித்திருந்தனர்.
அத்தோடு பொகவந்தலாவ தர்மகீர்த்தி சிங்கள வித்தியாலயத்தில் மொத்தம் 200 மாணவர்கள் கல்வி கற்று வருகின்ற நிலையில் இன்றையதினம் 10மாணவர்கள் மாத்திரம் வருகை தந்துள்ளதோடு ஏனைய பாடசாலைகளிலும் மாணவர்களின் வருகை குறைவாகவே காணப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.