மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள்- சிறைச்சாலைகள் திணைக்களம்

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள்- சிறைச்சாலைகள் திணைக்களம்

மஹர சிறைச்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ தற்போது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் 6 கைதிகள் பலியானதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், 2 சிறை அதிகாரிகள் உட்பட சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஷெல்டன் பெரேரா  தெரிவித்தார்.

மஹர சிறைச்சாலையில் கைதிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, கைதிகள் சிலர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்தபோது நேற்று மாலை இந்த பதட்ட நிலை ஏற்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

பதட்ட நிலையை கட்டுப்படுத்துவதற்காக மஹர சிறைச்சாலைக்கு காவல்துறை விசேட அதிரடிப் படையினரை அனுப்பியதாக காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை ஏற்பட்ட இந்த பதட்ட நிலையுடன், மஹர சிறைச்சாலையில் தீப்பரவல் சம்பவம் ஒன்றும் பதிவானது.

அந்தத் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக 6 தீயணைப்பு வாகனங்களும் சிறைச்சாலைக்கு அனுப்பட்டன.

கம்பஹா தீயணைப்பு படைப்பிரிவு வாகனத்திற்கு மேலதிகமாக, கடற்படை மற்றும் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்களும், இந்த தீயணைப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டன

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அமைச்சின் செயலாளர் தலைமையில் விசேட குழுவை நியமிப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்

சிறைக் கைதிகள் திட்டமிட்ட அடிப்படையில் தப்பிச் செல்ல முயற்சித்த சம்பவம் இதுவாகும் என்றும்   தெரிவித்தார்.