
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பிலான விபரம்
நாட்டில் நேற்றைய தினம் 496 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
இந்தநிலையில் நாட்டில் கொவிட்-19 நோயால் பீடிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23,484 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியான அனைவரும் பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை கொத்தணி கொரோனா நோயாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி பேலியகொடை மற்றும் மினுவங்கொடை கொத்தணி கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 19,946 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 346 பேர் குணமடைந்துள்ளனர்
.குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 17,000ஐ கடந்தது.
இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான 17,002 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் தொற்றுறுதியான 6,366 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நேற்றைய தினம் கம்பஹா மாவட்டத்தில் புதிதாக 67 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
அவர்களில் 34 தொற்றாளர்கள் வத்தளை பகுதியை சேர்ந்தவர்களாவர்.
இந்தநிலையில் கம்பஹா மாவட்டத்தில் மொத்தமாக கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 5,278 ஆக அதிகரித்துள்ளதாக பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீஹார ஏப்பா தெரிவித்துள்ளார்.
அந்த மாவட்டத்தில் இதுவரை 79,388 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஹட்டன் - டன்பார் பகுதியில் உயிரிழந்தவரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர்.பரிசோதனையின் முடிவு இன்று வெளியாகவுள்ளது..
சுயதனிமையிலிருந்த 84 வயதான வயோதிபப் பெண் ஒருவரே நேற்று மாலை உயிரிழந்தார்.
அவரின் பேரப்பிள்ளை கொழும்பு பம்பலபிட்டி பகுதியிலிருந்து வருகைத்தந்திருந்த நிலையில் அவரது குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை குறித்த வயோதிப பெண் திடீரென உயிரிழந்ததாக அம்பமுகவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினுடைய பதில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.காமதேவன் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 5 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
வெளி மாவட்டங்களில் இருந்து தொழில் நிமித்தம் வட மாகாணத்திற்கு வந்தவர்களுக்கே இவ்வாறு கொவிட்-19 தொற்றுறுதியானதாக யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
கடந்த 21 ஆம் திகதி வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவரோடு சாரதியாக கடமையாற்றியவர் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் நேற்று அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு தென்பகுதியில் இருந்து வீதி திருத்த பணிகளுக்காக சென்றிருந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுதவிர, தென் பகுதியிலிருந்து தொழில் நிமிர்த்தம் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு சென்ற போது தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 3 பேர் கொவிட்19 தொற்றுறுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இதேவேளை, கொவிட்-19 தொற்றுறுதியான 8 பேர் கிழக்கு மாகாணத்தில் நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.