
நேற்றைய தினமும் மேலும் 7 கொரோனா மரணங்கள்- முழுமையான விபரங்கள்
நாட்டில் நேற்றைய தினம் 7 கொவிட்19 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கமைய இலங்கையில் பதிவான மொத்த கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு - 02 பகுதியை சேர்ந்த 50 வயதான பெண் ஒருவர் கொவிட்-19 தொற்றுறுதியானவர் என கண்டறியப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்
அவர் அந்த வைத்தியசாலையின், அவசர சிகிச்சைப் பிரிவில், சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்
மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானமை மற்றும் நீண்ட காலமாக இருந்த நுரையீரல் நோய் நிலைமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கொத்தட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஆண் ஒருவர் கடந்த 27ஆம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்-19 தொற்றுடன் நிமோனியா, நீண்ட காலம் காணப்பட்ட நுரையீரல் நோய் மற்றும் நீரிழிவு நோய் என்பன அதிகரித்தமையே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதான ஆண் ஒருவர் கொவிட்-19 தொற்றுறுதியானவராக இனங்காணப்பட்டு சிகிச்சைப்பெற்ற வந்த நிலையில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்தார்
மரணத்திற்கான காரணம் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதினால் அதிகரித்த நிமோனியா நோய் நிலைமையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் பகுதியை சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர், சிலாபம் ஆதார வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் நீரிழிவு, உயர் குருதி அழுத்தத்துடன் கொவிட் -19 நிமோனியா ஏற்பட்டமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அக்குரஸ்ஸ பகுதியை சேர்ந்த 51 வயதான பெண் ஒருவர் கராபிட்டி போதனா வைத்தியசாலையிலிருந்து கொவிட்-19 தொற்றக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்டார்.
இதனையடுத்து அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அந்த வைத்தியசாலையில் கடந்த 27ஆம் திகதி உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் நீண்டகாலம் இருந்த நீரிழிவு நோயுடன் கொவிட் -19 நிமோனியா நிலை ஏற்பட்டமை என தெரிவிக்கப்பட்டுள்ளது
கொழும்பு - 13 பகுதியை சேர்ந்த 90 வயதான பெண் ஒருவருக்கு கொவிட் -19 தொற்றுறுதியானதன் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், அந்த வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானமையினால் ஏற்பட்ட நிமோனியா நோய் நிலைமையாகும்.
இதுதவிர, மருதானை பிரதேசத்தை சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர் கடந்த 27ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்-19 தொற்று நிலைமையுடன் நுரையீரல் செயலிழந்தமை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.