கண்டி தேசிய மருத்துவமனையில் இரண்டு குழந்தைகளுக்கு தொற்று உறுதி
கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்க்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 6 மாத குழந்தை மற்றும் ஒன்றரை வயது குழந்தை உள்ளடங்குவதாகவும் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் இரேஷா பெர்னாண்டோ கூறியுள்ளார்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை தெல்தெனிய மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கண்டி தேசிய மருத்துவமனையில் ஒரு மருத்துவர், ஏழு செவிலியர்கள் மற்றும் ஐந்து துணை ஊழியர்களுக்கு நேற்று கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து குறித்த மருத்துவமனை வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
தற்போதைய நிலைமை காரணமாக திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்றும் டாக்டர் இரேஷா பெர்னாண்டோ தெரிவித்தார்.
மருத்துவமனை ஊழியர்களைப் பாதுகாப்பது மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது முக்கியம் என்பதால் அத்தியாவசிய மற்றும் அவசர அறுவை சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான சிகிச்சை வழக்கம் போல் மேற்கொள்ளப்படும் அதே வேளையில் கிளினிக்குகளும் கட்டுப்பாட்டுடன் செயல்படும் என்று மருத்துவமனை இயக்குநர் கூறினார்.