நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்தைக் கடந்தது
இலங்கையில் கொவிட்-19 நோயால் பீடிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23,311ஆக அதிகரித்துள்ளது
இன்றையதினம் 323 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று செய்யப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் ஏலவே கொரோனா நோயாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 346 பேர் குணமடைந்ததோடு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்தது.
இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான 17,002 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தொற்றுறுதியான 6,200 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், போகம்பறை பழைய சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தப்பி செல்ல முயற்சித்த நான்கு கைதிகளும் சிறை அதிகாரிகளால் தடுக்கப்பட்டனர்.
தற்போது குறித்த சிறைச்சாலையில் 313 கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய மேலும் 183 பேருக்கு இன்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய ஆயிரத் 91 பேருக்கு இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதேவேளை, காவல்துறையினரிடம் தொற்று பரவல் கட்டுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
கடந்த 4 நாட்களில் 30 பேர் வரையிலேயே தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய நேற்றைய தினம் மூன்று பேருக்கே கொவிட்-19 தொற்றுறுதியானது.
எவ்வாறாயினும் 2,300 பேர் வரை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
இதேவேளை, பொகவந்தலாவை-கெம்பியன் பகுதியில் பகுதியில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்தார்.
69 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
அவரது மகளும், மருமகனும் பத்தரமுல்லை பகுதியில் இருந்து அவரது வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இறந்தவரின் உடலுக்கு பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், இன்னும் அதன் பெறுபேறு கிடைக்கப்பெறவில்லை.