தடைகளை உடைப்பதே எமது கொள்கை - ஜீவன் தொண்டமான்

தடைகளை உடைப்பதே எமது கொள்கை - ஜீவன் தொண்டமான்

தடைகளை உடைத்தெறிந்து வெற்றியை நோக்கி பயணிப்பதே எமது உறுதியான கொள்கை என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை - டெரிக்கிளயார் தோட்டத்துக்கான வீதியை அகலப்படுத்தி புனரமைக்கும் பணிகளை இன்று(29) ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் பேசிய அவர்,

வராது, கிடைக்காது, முடியாது என குறைகளை மட்டும் கூறிக்கொண்டிருப்பது தலைமைத்துவ பண்பு கிடையாது. தீர்வுகளை அடைவதற்காக தடையாக உள்ள காரணிகளை உடைத்தெறிய வேண்டும். அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என திட்டம் வகுக்க வேண்டும்.

இதனை நிச்சயம் செய்யமுடியும். அரசியலுக்கு அப்பால் சிறந்த நிர்வாகியாக செயற்படுவதையே நான் விரும்புகின்றேன்.

மலையக மக்களும் இலங்கையர்களே, அபிவிருத்தி திட்டங்களுக்காக வரவு - செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி அவர்களுக்கும் உரித்துடையது.

மத்திய அரசாங்கத்தின் பாதீடு என்பது முழு நாட்டுக்குமானது, அதில் ஒவ்வொரு பிரிவுகளுக்கான ஒதுக்கீடுகள் இருக்கும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இங்கு பல்கலைக்கழகம் அமைப்பதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நான் பதவிக்கு வந்து குறுகிய காலப்பகுதி தான். அதற்குள் பல அபிவிருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வீட்டுத்திட்டமும் விரைவில் ஆரம்பிக்கப்படும். அதற்கு முன்னர் அரைகுறையாக உள்ள வீடுகளை முழுமைப்படுத்தி பயனாளிகளிடம் கையளித்துவிட வேண்டும்.

ஆயிரம், ஆயிரம் என்று ஆயிரம் ரூபாவை பற்றி மட்டுமே கதைக்கின்றனர், தற்போதைய சூழ்நிலையில் ஆயிரம் ரூபா போதாது, தற்போதைய முறைமை மாற்றப்படவேண்டும் என்பதே எனது கருத்தாக இருக்கின்றது. பேச்சுவார்த்தைகளின் போதும் இதனை வலியுறுத்தியுள்ளோம் என்றார்.