ஜப்பான் சிறுமியை இலங்கை அழைத்து வந்த விவகாரம்- முடிவின்றி தொடரும் சர்ச்சைகள்
ஜப்பானிய சிறுமி ஒருவரை இலங்கைக்கு அழைத்து வந்து அவரை திருமணம் செய்ய முயற்பட்ட இளைஞர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்துள்ளன.
தமது மகளை இலங்கையிலுள்ள இளைஞர் ஒருவர் கடத்தி வந்ததாக குறித்த சிறுமியின் தாய் கடந்த மார்ச் மாதம் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
பின்னர் நீர்கொழும்பு - கொச்சிக்கடை காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்
குறித்த இலங்கை இளைஞர் மற்றும் 16 வயதுடைய சிறுமி கடந்த 26 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டமையை அடுத்து அந்த இளைஞர் எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 3 பேரும் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் காவல்துறையினர் குறித்த இளைஞருக்கு எதிராக நீதிமன்றில் விளக்கமளித்துள்ளனர்.
எவ்வாறாயினும் ஜப்பான் சட்டத்திற்கு அமைய 16 வயதுக்கு மேற்பட்ட சிறுமி திருமணம் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் குறித்த சட்டம் திருத்தப்பட்டு, பெண்களின் வயதெல்லை 18 ஆக மாற்றப்பட்டுள்ளதோடு இந்த சட்டம் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு அமுலாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த சிறுமியின் தாய் இவர்களின் தொடர்பை எதிர்த்தமையை அடுத்து அந்த சிறுமி மற்றும் இளைஞர் ஆகியோர் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
இலங்கை இளைஞர் கற்றல் செயற்பாடுகளுக்காக ஜப்பான் சென்றிருந்ததோடு குறித்த சிறுமியின் வீட்டில் தற்காலிகமாக பணியாற்றிய சந்தர்ப்பத்தில் இந்த தொடர்பு ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத தாய் பின்னர் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் தமது தாய்க்கு தெரிந்த இலங்கையர் ஒருவர், இங்குள்ள முன்னணி விருந்தகம் ஒன்றில் வைத்து தாயின் அனுமதியுடன் தம்மை துஷ்பிரயோகம் செய்ததாக குறித்த சிறுமி குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் முழுமையான விருப்பத்துடனேயே தாம் இலங்கைக்கு வந்தததாகவும் அந்த சிறுமி குறிப்பிட்டுள்ளார்.
தம்மால் மீண்டும் ஜப்பான் செல்ல முடியாதெனவும் தமது தாயும், அவருடன் தொடர்புடைய இலங்கையரும் தம்மை துன்புறுத்த கூடும் எனவும் சிறுமி கூறியுள்ளார்.
அத்துடன் தனது தாயும் அவருடன் தொடர்புடைய இலங்கையரும் கைது செய்யப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.