கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 178 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி
நாட்டில் நேற்றைய தினத்தில் 487 பேருக்கு கொவிட்19 தொற்றுதியானது.
பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய 487 பேருக்கே, நேற்று கொவிட்19 தொற்று கண்டறியப்பட்டதா இராணுவத் தளபதி லெப்ஃடினன் ஜெனரால் சவேந்திரசில்வா தெரிவித்தார்.
இதனையடுத்து நாட்டில் கொவிட்19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 22,988 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேநேரம், மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடைய நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 19,450 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் 430 கொவிட்19 நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
நாட்டில் இதுவரை இந்த தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,656 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் 6,225 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று பரிசோதிக்கப்பட்ட 296 பீ.சி.ஆர் மாதிரிகளில் 2 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியானது.
வவுனியா தனிமைப்படுத்தல் நிலையங்களைச் சேர்ந்த இருவருக்கே இவ்வாறு தொற்று உறுதியானதாக
யாழ்ப்பாண வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 178 பேருக்கு கொவிட்19 நோய்த்தொற்று இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
அதேநேரம் தற்போது அக்கறைப்பற்றில் நடைமுறையில் இருக்கின்ற தனிமைப்படுத்தல் விதிகளை எவ்வாறு தளர்த்துவது என்பது தொடர்பாக நாளைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொரோனா நோயினால் கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளுது.
நேற்றையதினம் இந்த பகுதியில் 1000க்கும் அதிகமான பி.சீ.ஆ.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போதும் கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் கொரோனா அச்சுறுத்தல் குறையவில்லை என்று, இலங்கை பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
தற்போது பொதுசுகாதார பரிசோதகர்களால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் கொரோனா நோய் பரவி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கொழும்பில் பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், பல தொடர்மாடி குடியிருப்புகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், கொவிட் 19 நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்ற பிரதேசங்களுக்கு உடனடியாக நடமாட்டத்தடை விதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ருவான்வெல்ல - அங்குருவெல்ல நகரில் தனியார் மருத்துவமனை ஒன்றின் வைத்தியருக்கும் அவரது மனைவிக்கும் கொவிட் 19 நோய் இருக்கின்றமை கண்டறியப்பட்டதை அடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.
அவர்களுடன் தொடர்பில் இருந்து 1000க்கும் அதிகமானவர்கள் இதுவரையில் கண்டறியப்பட்டிருப்பதாக, பொதுசுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், பல கொவிட்19 நோயாளர்கள் பொகவந்தலாவை நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்றிருந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து, அங்குள்ள பல வர்த்தகநிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.