நேற்றைய நாளிலும் இரண்டு கொரோனா மரணங்கள்- மரணித்தோர் தொடர்பிலான முழுமையான தகவல்கள்
இலங்கையில் கொரோனா தொற்றுறுதியானவர்களில் மேலும் இரண்டு பேரின் உயிரிழப்பு நேற்று பதிவாகியது.
இதன்படி நாட்டில் இதுவரை கொவிட்19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு 02 பகுதியை சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர் கடந்த 26ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் உயர் குருதி அழுத்தம் மற்றும் நீண்டகால சிறுநீரக நோய் கொவிட் 19 தொற்றினால் தீவிரமடைந்தமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கொழும்பு - 08 பகுதியை சேர்ந்த 96 வயதான பெண் ஒருவர் நேற்று முன்தினம் தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் ஆஸ்துமா, கொவிட் 19 உடன் நிமோனியா நோய் நிலமையாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் ஏற்பட்ட கொவிட்19 இரண்டாம் அலையில் இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு இரண்டாம் அலையில் பதிவான உயிரிழப்புகளில் அதிகமானோர் 60 வயதுகளுக்கு மேற்பட்டோர் என கொவிட்19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.