கண்டி - தேசிய மருத்துவமனையின் தாதியர்களுடன் தொடர்பை பேணிய மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்றுறுதி
ருவன்வெல்ல - அங்குருவெல்ல நகரில் தனியார் மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றை நடாத்திச் சென்ற மருத்துவர் ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானது.
இதனையடுத்து அவரிடம் சிகிச்சைகளுக்காக பிரவேசித்த 500க்கும் மேற்பட்டடோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சுகாதார பரிந்துரைகளை பின்றபற்றாது குறித்த மருத்துவர் சிகிச்சையளித்துள்ளதாக பொது மக்கள் சிலர் முறையிட்டுள்ளதாக ருவன்வெல்ல சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
அம்பகமுக சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட வெலிஓயா பகுதியில் மேலும் இரண்டு பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினுடைய பதில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.காமதேவன் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, சிறைச்சாலைகளில் மேலும் 87 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களில் 63 பேர் வெலிக்கடை சிறைச்சாலையில் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 12 பேருக்கும், மெகசின் சிறைச்சாலையில் 12 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்குமுன்னர் கொவிட் நோயாளர்கள் அடையாளங்காணப்படாத பொலன்னறுவை சிறைச்சாலையிலும் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் புதிதாக 3 அதிகாரிகளுக்கும் தொற்றுறுதியாகியுள்ள நிலையில் சிறைச்சாலைகளில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 908 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொவிட்-19 தொற்றுறுதியான கண்டி - தேசிய மருத்துவமனையின் கண் மற்றும் காது தொடர்பான சிகிச்சை பிரிவில் சேவையாற்றும் இரண்டு தாதியர்களுடன் தொடர்பை பேணிய மேலும் 17 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
கண்டி தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் விஷேட மருத்துவர் இரேஷா பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.
அவர்களில் மருத்துவர் ஒருவரும் 9 தாதியர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் - கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள வெதுப்பகம், மின்சார நிலைய வீதியில் உள்ள வர்த்தக நிலையம் என்பவற்றை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காரைநகரில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறதியானதையடுத்து அவர் சென்று வந்த இடங்கள் சுகாதாரத் துறையினரால் இனங்காணப்பட்டு தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தப்படுகின்றனர்.
இதேவேளை, தற்போது தனிமைப்படுத்திய பண்டாரகம - அட்டுலுகம பகுதியில் சிலர் பி.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளாதிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.
சுகாதார ஆலோசனை கிடைத்துள்ள போதிலும் பீ.சி.ஆர் பரிசோதனைகளில் முன்னிலையாகாதவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பண்டாரகம - அட்டுலுகம பகுதியிலிருந்து படகு மற்றும் ஓடங்களை பயன்படுத்தி கிரிமன்துடாவ பிரதேசத்திலிருந்து பொல்கொட கங்கை ஊடாக ஏனைய பகுதிகளுக்கு பிரவேசிப்பதை தடுக்க கடற்படையினர் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, தற்போது கொழும்பு நகர எல்லைக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் வசிக்கும் மக்களுக்காக அடுத்த மாதமும் நடமாடும் வைத்திய சேவையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல் இந்த சேவை அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் மக்களின் அதிகளவான கோரிக்கைக்கு அமைய அடுத்த மாதமும் இந்த நடமாடும் வைத்திய சேவையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மெத்சந்த செவன, மிஹிஜய செவன, ரன்மினி செவன மற்றும் சிறிசந்த உயன உள்ளிட்ட 17 அடுக்குமாடி குடியிருப்பு தொகுதிகளில் இந்த நடமாடும் வைத்திய சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் அல்லது தனிமைப்படுத்தியுள்ளவர்கள் வசிக்கும் வீடுகளில் உள்ள மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு கோரியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தொற்றை எதிர்கொண்டு பாடசாலை கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கின்றமை சவாலானதொரு விடயமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொவிட் 19 தொற்றிலிருந்து இன்றைய தினம் மேலும் 430 பேர் குணமடைந்துள்ளனர்.
இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியுள்ளவர்களின் எண்ணிக்கை 16,656 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 5,738 கொவிட் 19 நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் இதுவரை 22,501 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர்.