தீக்கிரையான நோர்வூட் குடியிருப்பு தொகுதி- வேறு இடங்களில் வீடுகளை அமைத்து கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை
ஹட்டன்-நோர்வூட் பிரதேசத்தில் நிவ்வெளி தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 12 வீடுகள் சேதமடைந்திருந்தன. இந்நிலையில் குறித்த வீடுகளில் வசித்து வந்த 12 குடும்பங்களுக்கும் வேறொரு பாதுகாப்பான இடத்தில் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நுவரெலிய மாவட்ட செயலாளர் ரோஹண புஸ்பகுமார தெரிவித்தார்.
நேற்றிரவு (27) திடீரென ஏற்பட்ட தீ பரவல் காரணமாக குறி்த்த தோட்டத்தில் உள்ள 12 வீடுகளும் தீக்கிரையாகியிருந்தன. அங்கு வசிதது வந்த 12 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 47 பேர் வேறு இடங்களுக்கு தற்காலிகமாக இடம்பெயர்ந்தனர்.
இந்நிலையில், தற்காலிக தங்குமிடங்களில் வசித்து வரும் மேற்படி நபர்களை நுவரெலிய மாவட்ட செயலாளர் இன்று நேரில் சென்று சந்தித்துள்ளதோடு, அவர்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்களையும் வழங்கி வைத்துள்ளார்.