கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து பொதுசுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை என்ன?
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் கொரோனா வைரஸ் நிலவரம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சென்றுவிட்டது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது சிறிய கொத்தணிகள் உருவாகும் நிலைமை காணப்படுகின்றது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகண புத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னர் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் பேலியகொட மற்றும் கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் உருவான தொற்றுக்கள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் கம்பஹா களுத்துறையில் கொரோனா பரவல் குறைவடைந்திருந்த போதிலும் கடந்த சில நாட்களில் வத்தளை மற்றும் களுத்துறையில் புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் மீனவர் சமூகத்தினரின் மத்தியில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள தனியார் அரசநிறுவனங்களை ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டதன் காரணமாக அந்த பகுதிகளில் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் உபுல்ரோகண குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனங்களை மீள ஆரம்பிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டதன் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கின்றது என தெரிவித்துள்ள அவர் அதிகாரிகளை போக்குவரத்து கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.