முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 47 தனிமைப்படுத்தல் மையங்களில் 5 ஆயிரத்து 88 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்..!

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 47 தனிமைப்படுத்தல் மையங்களில் 5 ஆயிரத்து 88 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்..!

இன்று காலை வரையில் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 47 தனிமைப்படுத்தல் மையங்களில் 5 ஆயிரத்து 88 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்றைய நாளில் 13 ஆயிரத்து 286 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மேலும் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் இன்று பீடிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி பத்தனை கிறேக்கிலி தோட்டத்தில் 18 வயதுடைய யுவதிகள் இருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் இருந்து கடந்த 16 ஆம் திகதி அவர்கள் தமது ஊருக்கு வருகை தந்துள்ள நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பின்னர் கடந்த 26 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு; அதன் முடிவுகள் இன்று வெளியான நிலையில் அவர்கள் இருவருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன், கொட்டகலை - வூட்டன் தோட்டத்தில் 36 வயதுடைய ஆணொருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவரும் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் இருந்து தமது சொந்த ஊருக்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அதேநேரம் கொழும்பு, கிரிபத்கொடை பகுதியில் இருந்து தலவாக்கலை, கிரேட்வெஸ்டன் தோட்டத்தின் லூசா பிரிவிலுள்ள வீட்டுக்கு வருகை தந்த 18 வயது இளைஞர் ஒருவருக்கும் வைரஸ் தொற்றுறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, கொழும்பில் இருந்து எவரேனும் வந்திருந்தால், தகவல்களை மறைக்காமல் அதனை உரிய தரப்பினருக்கு வழங்குமாறு கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிராசாந்த் மற்றும் கொட்டகலை பிரதேச சுகாதார பரிசோதகர் சௌந்தராகவன் ஆகியோர் கோரியுள்ளனர்.

கொழும்பில் இருந்து வந்தர்களிடம் தொடர்ச்சியாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, மத்தியமாகாணத்தில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 377 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய மாகாண சுகாதார காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் 177 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில 100 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 100 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளதாக மத்திய மாகாண காதார அத்தியட்சகர் நிகால் விரசூரிய தெரிவித்தார்.

இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பிரதேங்களில்; மேற்கொள்ளப்படும் பி.சீ.ஆர். பரிசோதனைகளில் பங்கேற்க வேண்டாம் என பொது மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்த தரப்பினர் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

4 பேர் கொண்ட குழு இணையத்தளம் ஊடாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறித்த தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் முககவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த சுகாதார வழிமுறைகளை பேணாத 766 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.