கொழும்பில் 138 பேருக்கு கொரோனா: 2ஆம் அலையில் உயிரிழந்தவர்களில் 42 வீதமானோர் 71 வயதிற்கு மேற்பட்டோர்

கொழும்பில் 138 பேருக்கு கொரோனா: 2ஆம் அலையில் உயிரிழந்தவர்களில் 42 வீதமானோர் 71 வயதிற்கு மேற்பட்டோர்

இலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 473 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 138 பேர் அதாவது அதிகளவிலானோர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 63 பேர் கம்பஹாவை சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கொழும்பில் பொரளையில் 42 பேரும் மட்டக்குளியவில் 32 பேரும் கிராண்ட் பாஸில் 11 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு இரத்தினபுரியில் 35 பேரும் குருநாகல் மாவட்டத்தில் 14 பேரும் கேகாலை மற்றும் மட்டக்களப்பில் தலா 05 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் நுவரெலியா மாவட்டத்தில் தலா 04 பேரும் குருநாகல் மற்றும் புத்தளத்தில் தலா 03 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு கண்டியில் 02 பேரும் அனுராதபுரம், காலி, மொனராகலை மற்றும் யாழ்ப்பாணத்தில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 501 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 16 ஆயிரத்து 226 பேர் குணமடைந்துள்ளதுடன் 6 ஆயிரத்து 168 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 107 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றின் இரண்டாவது அலையினால் நாட்டில் உயிரிழந்தவர்களில் 42 வீதமானவர்கள் 71 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.