தந்தையின் பெயரில் புதிய கட்சி உதயமானது- அனுஷா சந்திரசேகரன் அறிவிப்பு
'சந்திரசேகரன் மக்கள் முன்னணி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் ஆரம்பித்துள்ளார்.
அதன் செயலாளராக தாம் செயற்பவடுவதாகவும் அனுஷா சந்திரசேகரன் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.
ஏனைய பதவிகளுக்கு எதிர்வரும் காலங்களில் பொருத்தமானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செயலாளராக பதவி வகித்த அனுஷா சந்திரசேகரன், கடந்த பொதுத் தேர்தலில் கட்சியில் போட்டியிடுவதற்கு தலைமையினால் அனுமதி மறுக்கப்பட்டமையினால், சுயேட்சையாக போட்டியிட்டு 17 ஆயிரத்து 107 வாக்குகளைப் பெற்றார்.
இவ்வாறான பின்னணியில், மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை அங்கத்துவத்திலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
இதையடுத்து, மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளரும், பேராசிரியருமான விஜயசந்திரன், கட்சியின் பிரதி செயலாளராக நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
கட்சியின் தேசிய சபை இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் லோரன்ஸ் செல்வநாயகம் கடந்த ஓகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார்.
எவ்வாறிருப்பினும், தேசிய சபையின் தீர்மானத்திற்கு அனுஷா சந்திரசேகரன் ஆட்சேபனை வெளியிட்டிருந்தார்.
இவ்வாறான பின்னணியில், அனுஷா சந்திரசேகரன் புதிய கட்சியை ஆரம்பிப்பதாக அண்மைக் காலங்களில் மலையக அரசியலில் பேசுபொருளாக இருந்த நிலையில், சந்திரசேகரன் மக்கள் முன்னணி என்ற கட்சியை அவர் ஆரம்பித்துள்ளார்.
கடந்த பொதுத்தேர்தலில் தன்னை நம்பி வாக்களித்த 17 ஆயிரத்து 107 பேருக்கும், மாற்றத்தின் தாகத்தை மிக நீண்டகாலமாக எதிர்நோக்கி இருக்கும் மலையக சமூகத்திற்கும் தன்னால் ஆற்றப்பட வேண்டிய சேவைகள் மிக அதிகமானதும் அத்தியாவசியமானதும் என்பதை தான் உணர்வதாக அனுஷா சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ளார்.