ஊழியர் போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

ஊழியர் போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

ஊழியர் போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

ஊழியர் போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்காக 150 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் கமாண்டர் நிலான் மிரான்டா தெரிவித்துள்ளார்.

மேலும், அரச மற்றும் தனியார் பிரிவுகளை சேர்ந்த 20 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த பஸ் சேவைகள் இன்று நவம் மாவத்தையிலிருந்து கண்டி வீதி, காலி வீதி, ஹைலெவல் வீதி, லோ லெவல் வீதி மற்றும் சிலாபம் வீதிக்கருகில் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து நாட்களிலும் காலை 8.30 அளவில் பதிவு செய்துள்ள நிறுவனங்களுக்கு அருகில் செல்லும் வகையிலும் மாலை 4.30 அளவில் அங்கிருந்து புறப்படும் வகையிலும் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்காக, “கொவிட் காப்புறுதி நிதி” எனும் பெயரில் விசேட பாதுகாப்பு காப்பீட்டை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இ.போ.ச பஸ்ஸொன்றில் பயணித்தமையினால் பயணி ஒருவருக்கு COVID தொற்று உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு 10,000 ரூபா காப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதேபோன்று, பயணி ஒருவர் COVID தொற்றினால் உயிரிழந்தால் அவருக்காக 50,000 ரூபா காப்பீட்டு நிதியை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த காப்புறுதியை பெற்றுக்கொள்ள பயணிகள் தமது பயணச் சீட்டை வைத்திருக்க வேண்டியது கட்டாயமானதெனவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

COVID தடுப்பு தேசிய செயலணி, இ.போ.ச புலனாய்வு பிரிவு, சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வைத்தியர்களால் பயணி ஒருவர் இ.போ.ச பஸ்களில் COVID தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இந்த நிதி வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது