பேலியகொட மீன் சந்தையில் புதிய சுகாதார நடைமுறைகள்

பேலியகொட மீன் சந்தையில் புதிய சுகாதார நடைமுறைகள்

சுகாதார நடைமுறைகளைப் பயன்படுத்தி பேலியகொட மீன் சந்தையின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆராயப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடல் மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நேற்று (26 ) நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், பேலியகொட மீன் சந்தையின் செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் கடற்றொழில்சார் செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் அதன் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கடற்றொழிலாளர்களினால் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

எனினும், பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், மீண்டும் சந்தை செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பாக சாதக பாதகங்களை ஆராய்ந்து வருவதாகவும் துறைசார் நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒழுங்கு முறைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தி சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி, கட்டம் கட்டமாக சந்தை வியாபார நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த கூட்டத்தில் அமைச்சு அதிகாரிகளும் கலந்துகொண்டதுடன் சந்தை நிர்வாகிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் காணொளி ஊடாக கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது